Monday, February 27, 2012

எல்லோரும் குயிலைப்  பாடுங்கள்
மயிலுடன் தோகை வீசுங்கள்--
நான் என் கரிச்சானைப் பாடப் போகிறேன் 
உடம்பில் பொட்டு வெண்மை இல்லை 
முழுக்கவே மை சொட்டும் கறுப்பு
கை அடக்கமாய் அப்படி ஓர் உடம்பு 
நீரோட்டமாய் அதன் வடிவு 
உடலின் நீளம் ஓர் இரட்டை வால் 
விசிறியாய் விரியும் அதன் நேர்த்தி
தவசி போலும் ஓர் தியானம் 
தன்னை மறந்து இழையும் ராகம் 
இரட்டையாய் பிறக்கும் சொற்கள் 
தலையும் இரட்டை மண்டை 
வருவதும் எப்போதும் இரட்டை
உன்னைச் சார்ந்தது எல்லாம் இரட்டைதானோ?
பூங்கிளைக்கும் வலியாத அமர்வு 
சட்டெனச் சுழலில் பறந்து 
என்ன நீ கொணர்வாயோ?
ஏதும் தின்று நான் காண்கிலேனே -
பல மொழிகள்  பேசுகையில் 
ஒவ்வொன்றின் பொருள் ஆய்ந்து 
நான் தவிப்பில் துவள்வது உண்டு -
பறவை மொழி அறியாது 
நான் படும் துயர் எவர் அறிவார் ?
ஓர் இரட்டை இரட்டையுடன் 
தினம் காலை நேயம் வளர்த்தேன் 
மொட்டைமாடியில் தவறாது வந்து 
கீதம் பாடி எனைச் சிலிர்க்கும் -
அவை பாராது நிம்மதி இல்லை
என் காலையே வீணானது போலாகும் 
இன்று தாமதம் ஆகிப் போச்சு 
காணாது நொந்து போச்சு-
வான்வெளியுள் மௌனமாய்க் கூவி 
வாராய் வாராய் எனத்  துடித்தேன் -
வந்தன  வந்தன  கண்டேன்
ஆனால் அமராது விலகிப் போச்சே
ஓ.என் மீது கோபம் தானோ ?
நட்பில் விரிசல் இல்லை 
நாளை எல்லாம் சரியாகும் !
 
---சந்திர கலாதர்

No comments:

Post a Comment