Wednesday, February 15, 2012

15.02.2012.புதன் /மாசி 3/கர ஆண்டு 

உதய கால நிகழ்வுகள்  

&

உதய வேளை-

தூரத்து உயர்ந்து  அகன்ற  கட்டிடங்கள்

மறதியில் அமிழ்ந்த 'நிகழ்ந்தவை'போல் 

கடலில் தொலைவில் காணும் கப்பல்கள்போல்

எண்ணெய்க் குடுவை மூழ்கிய  பொருட்கள்போல்

விளக்கங்கள்  இழந்து விளிம்புகளில் தொங்கும் மாயைகளாய் ---


எந்த இலக்குமே இல்லாது

சும்மா விருட்டென வான் எழுந்து 

'படபட' வென ஓரிரு வட்டமிட்டு

கூட்டமாய்  அழகாய் வழி சறுக்கி

உல்லாசம் ஒன்றுக்கே காலை தரும் 

உற்சாகப் புறாக்களை என்ன சொல்வேன் !


கறுப்பின் அழகில் சந்தேகமோ?

'பளபள'க் கரிச்சான்கள் கண்ட பின்பு

'சுறுசுறு'க் கறுப்பினில் அழகு காண்பீர்  !

குட்டிக்கரணம் அடிக்கும் 'ரெட்டைவால்'கள்

விசிறி 'றெக்கைகள்' விரித்துப் பாய்ந்து

போர்விமானம்போல் பறக்கக் காண்பீர் !

கூவும் குரலோ கொஞ்சும் மொழி !

எத்தனை முயன்றும் 'நகல்'மொழியில் 

நெருங்கவே இயலாது தோல்வி கண்டேன்   

 அதன்  பாடலில்தான் எத்தனை ஏற்ற இறக்கங்கள்! 

திருப்பி  மொழியாத் திறமும் தோற்க வைக்குது ! 

இந்தக்  கறுப்பின்  வடிவோ ஓர் விழி விருந்து !


எப்போதும்  அவசரம் ! எப்போதும் நேர்கோடாய் !

'கீ..கீ..கீ' எனக் கத்திக்கொண்டே ஒர்நோக்காய்

காற்றைக்  கிழித்துப் பறக்கும் பச்சைக் கிளிகள் ! 

ஆம், எங்கே போயின என் சிட்டுக் குருவிகள் ?

அதன் 'சிடு...சிடு' சொடுக்குகள் கேட்டு எத்தனை நாளாச்சு ? 

இவை அனைத்தையும் அமைதியில் ரசிக்கும் 

அழகாய் விடிந்த காலை வான்வெளி காண்!


---சந்திர கலாதர்
      

No comments:

Post a Comment