Saturday, March 10, 2012

கங்கைக் கன்னியே !
 
கதிரோனின் பொன் அடுப்பில்
 
இமய வெள்ளியின் உருகலாய்
 
களங்கமில் ஸ்படிக ரூபியாய்
 
மலைகளின் பளிங்கு மாலையாய்
 
'கலகல'ச் சிரிப்புடன்
 
தவழ்ந்தும் தாவியும்
 
உயரங்கள் குதித்து
 
சமவெளி தாழ்ந்தாய் --
 
புனிதமான நீ
 
மனிதனைப் பார்த்தாய் -
 
பசுமையாய்ப் பார்த்தாய்
 
புராணத்தில் புழுங்கிய அவனோ
 
பொய் பொதிந்திடப் பார்த்தனன் -
 
போற்றுவதாய் ஆராதனை காட்டி
 
மயானத்தில் உன்னைக் கரைத்தான்-
 
காசியில் உன்னைக் களங்கம் ஆக்கினான் -
 
அவன் பொய்மையும் பிடுங்கலும்
 
சுடுகாட்டினும் நாறின-
 
சாவின் நடனமும்
 
மரணத் தீயும்
 
அழுகிய உடல்களும்
 
அரைகுறை வேகலும்
 
உன் தொண்டையுள் செருகின-
 
மூச்சுத் திணறினாய்-
 
மனிதக் கழிவும் மரணச் சாம்பலும்
 
உன் ஆடையை அவிழ்த்து
 
அலங்கோலம் செய்தன-
 
வழியெலாம் நீ அழுதிடும் கூக்குரல்
 
ரத்த கங்கையாய் நெஞ்சைச் சிவக்குதே-
 
வங்கக் கடல் புலம்புகை எல்லாம்
 
மரணித்து மடியுள் வீழ்ந்த
 
அப்புனித கங்கைக்காக
 
மார்பில் அடித்தழும் ஓலங்கள் தானோ ?
 
 
 
 
ஒரு நதியைக் கொன்று
 
ஒரு சுவர்க்கம் தேடும் மூட மானுடா!
 
அங்கே பார் ! பகீரதன் மறுபடி
 
மாற்றுக்காலில் தவம் இருப்பதை -
 
மறுபடி கங்கையை வானுள் செலுத்த !
 
 
 
 
----சந்திர கலாதர்

No comments:

Post a Comment