Tuesday, March 20, 2012

தம்பூர் மீட்டியபடியே அழகாக ...
&
அவள் தம்பூர் மீட்டியபடியே
அழகாகப் பாடுகிறாள் -
தம்பூரின் நான்கு தந்திகளில்
அவள் இரு விரல்கள்
ஒரே நடையில் ஒரே திசையில்
படிகள் இறங்குவதுபோல்
மீண்டும் மீண்டும் வருடுகின்றன -
தம்பூர் நின்றபடியே சாய்ந்து
அவள் மீது மயங்கிக் கிடக்கிறது-
அது பேசாது பேசுகிறதோ ?
அவள் மனதோடு இழைகிறதோ ?
மெலிதாக அவளுக்கு மட்டுமேவா?
அவளின் அன்பான வருடலில்
தம்பூரே ,தூங்கிக் கனவுகிறாயா ?
சுற்றிய இசைக் கருவிகள்
நாதங்கள் குதித்திட
நீ மட்டும் கேளாத அடிநாதத்தில் -
அவளது உயிரின் மூச்சாகவா ?
நாதத்தின் உயிராகவா ?
அவள் இசை உன்னில் சாய்ந்து கொள்கிறதா ?
அல்லது நீ அவள் அமுதம் அமிழ்கிறாயா ?
ஓம் எனும் ஆதார ஸ்ருதியாகவோ ?
'ம்ம்' எனும் லயிப்பின் இமை இறக்கமோ ?
&
அது என்ன இசை வடிவம் ?
கர்நாடகமா? ஹிந்துஸ்தானியா ?
பாடுபொருள் தான் என்ன?
எதுவாயினும் அது மெல்லியது ;
இழைவது ; நெஞ்சோடு நெகிழ்வது ;
கை கோர்த்து அழைத்துச் செல்வது ;
மொழி கடந்து மொழிவது ;
புரியாது புரிவது;தெரியாதே ஒன்றுவது -
அதுதானே அவள் இசையின் மகிமை -
அவள் மெதுவாய் இங்கும் அங்குமாய்
பாடியபடி அசைகிறாள்-
அவள் இசையும் மகுடி நாகமாய்
அவள் விழி ஒன்றி இணை அசைவில் -
விரல்களை விரித்து
மெல்லக் கை உயர்த்துகிறாள் ;
ராகமும் மெலிதாகப் பறக்கிறது -
ஒரு இளம் தாய் தன் மழலையை
முத்தமிட்டுக் கொஞ்சுவதாய்
செல்லமாய்க் கெஞ்சுவதாய்
பின்னே ஆதரவாய்த் தொடர்வதாய்
ஓடிப் பிடிப்பதாய்
நெஞ்சாரக் கட்டிப் பிடிப்பதாய்
உச்சி முகர்வதாய்
பொய்க்கோபம் கொள்வதாய்--
சிலர் போல் முக வலிப்புகள்
வக்கிர உடல் அசைவுகள் அற்றதாய்
உருட்டல் புரட்டல்களில்
மொழி பொருள் காயங்கள் இல்லாததாய்
பூர்ணிமைப் பால் விரிவாய் -
ஆம், அவள் இசையை
தலை அசைவுகளால் எழுதுகிறேன்
நெடும் உள்மூச்சுக்களால்
கவிதை தைக்கிறேன்
மனநிறைவாய் வெண்புறவாய்
காற்றில் மிதக்கிறேன்.
-----சந்திர கலாதர்

Saturday, March 10, 2012

கங்கைக் கன்னியே !
 
கதிரோனின் பொன் அடுப்பில்
 
இமய வெள்ளியின் உருகலாய்
 
களங்கமில் ஸ்படிக ரூபியாய்
 
மலைகளின் பளிங்கு மாலையாய்
 
'கலகல'ச் சிரிப்புடன்
 
தவழ்ந்தும் தாவியும்
 
உயரங்கள் குதித்து
 
சமவெளி தாழ்ந்தாய் --
 
புனிதமான நீ
 
மனிதனைப் பார்த்தாய் -
 
பசுமையாய்ப் பார்த்தாய்
 
புராணத்தில் புழுங்கிய அவனோ
 
பொய் பொதிந்திடப் பார்த்தனன் -
 
போற்றுவதாய் ஆராதனை காட்டி
 
மயானத்தில் உன்னைக் கரைத்தான்-
 
காசியில் உன்னைக் களங்கம் ஆக்கினான் -
 
அவன் பொய்மையும் பிடுங்கலும்
 
சுடுகாட்டினும் நாறின-
 
சாவின் நடனமும்
 
மரணத் தீயும்
 
அழுகிய உடல்களும்
 
அரைகுறை வேகலும்
 
உன் தொண்டையுள் செருகின-
 
மூச்சுத் திணறினாய்-
 
மனிதக் கழிவும் மரணச் சாம்பலும்
 
உன் ஆடையை அவிழ்த்து
 
அலங்கோலம் செய்தன-
 
வழியெலாம் நீ அழுதிடும் கூக்குரல்
 
ரத்த கங்கையாய் நெஞ்சைச் சிவக்குதே-
 
வங்கக் கடல் புலம்புகை எல்லாம்
 
மரணித்து மடியுள் வீழ்ந்த
 
அப்புனித கங்கைக்காக
 
மார்பில் அடித்தழும் ஓலங்கள் தானோ ?
 
 
 
 
ஒரு நதியைக் கொன்று
 
ஒரு சுவர்க்கம் தேடும் மூட மானுடா!
 
அங்கே பார் ! பகீரதன் மறுபடி
 
மாற்றுக்காலில் தவம் இருப்பதை -
 
மறுபடி கங்கையை வானுள் செலுத்த !
 
 
 
 
----சந்திர கலாதர்

Thursday, March 8, 2012

மாசி மாதப் பௌர்ணமியை நேற்றுக் காணாமற் போனேன் -


மாசி மாதம் ஓர்முறை ஆண்டாண்டு வரலாம்

மாசி மாதம் ,ஆனால் ,என் வாழ்வில் எத்தனை அறியேன் -

முழு நிலைவை இழந்தது என் பேரிழப்பே

எனக்காகக் காத்திருந்து ஏக்கத்தில் தேய்ந்து போகுமே !

குளிர் நிலவின் வெண்முகத்தில் கண்ணீர் பதித்தேனே !

இனி நாள்தோறும் இதற்கு ஈடாய் இதனைச் செய்குவேன்-

எழும் கதிரோன் விழும் பரிதி வளர் நிலவு மெலி நிலவு

தினம் காத்திருந்து தவம் இருந்து காற்றினில் கண் மூழ்கி

தொடு வானில் விழி பதித்து வண்ணமிடை 'வருக' சொல்லுவேன்  !



----சந்திர கலாதர்

Saturday, March 3, 2012

ஒரு பிஞ்சின்  பிச்சை
 
&
 
கலைந்த சிகைவழி
 
கண்கள் கெஞ்சும் -
 
கிழிந்த உடைவழி
 
வறுமை வியர்க்கும் -
 
ஏந்திய கைகள்
 
ஏமாற்றம் பழகும் -
 
'இல்லை இல்லை!' 
 
செவியுள் குத்தும் --
 
'போ போ 'என்பதே 
 
நெஞ்சில் உதைக்கும்--
 
' அம்மா ! தாயே !'
 
எவர் நெஞ்சில் உறைக்கும் ?
 
 
 
---சந்திர கலாதர்   
இரு புள்ளிகள் இடையே 
 
மிகக் குறுகிய தூரம்
 
இணைக்கும் நேர்கோடே--
 
பல பொய்கள் புரட்டி 
 
மூடி மறைத்தாலும் 
 
இறுதியில் முளைப்பதோ   
 
உண்மை நேர்கோடே -
 
உண்மை நேர்கோட்டை 
 
வரைதல் கூடின் 
 
அதன்பின் நெஞ்சில்
 
ஏது கனம் ?
 
அதுபோல்  எழுத்திற்கு 
 
தேவையோ  அலங்காரங்கள் ?
 
வாடும் ஒப்பனை  
 
வனப்பை மறைக்கும் ;
 
மாயை சேர்க்கும் 
 
வாய்மையை  மிதிக்கும் ;
 
எளிமையின் வனப்பே 
 
உண்மையின் உன்னதம் -
 
காந்தியின்  எழுத்து  
 
எளிமையின் உச்சம்-
 
நிகண்டை நாடா 
 
சத்தியச்  சுவடுகள் !
 
எளிமை என்பது 
 
எளிதே அல்ல ! 
 
சத்தியம் நடக்கும் 
 
தனி வழிப்  பாதை !
 
 
 
-----சந்திர கலாதர்