Monday, June 27, 2011

Random Thoughts

எல்லா நிகழ்வுகளும் நாம் அறிந்தவைதான் ;

எல்லாமே நாம் உணர்பவைதான் ;

எல்லாமே நமக்குள்  மௌனமாய் சமைக்கப்படுவனதான்--

இருப்பினும் அவை சொல்லப்படுகின்றன ..கேட்கப் படுகின்றன..

எழுதப்படுகின்றன..விவாதிக்கப்படுகின்றன --

உணர்வுகள் எல்லோரும் அறிந்தவை ஆயினும் ,

அந்த உணர்வுகள் இயல்பானவை  ,சாதாரணமானவை ஆயினும்

எழுதுவதில் என்ன தவறு?

அவை எப்படி உணரப்பட்டன ?

எத்தகு சுவைபட எழுதப்படுகின்றன என்பதே முக்கியம் .

எனவேதான் சாதாரணமான எண்ணங்களில்

நான் பயணித்தவாறு எழுதப் போகிறேன்--

கவிதைகள்தான் எப்போதும் எழுதப்படவேண்டும் என்பதில்லை !

தன்னுள் பார்த்துச் சிந்திக்கும் அதே மனிதன் வேறு கோணங்களில் 

மற்றவர்களைப் பார்த்தும் சிந்திக்கிறான்--

தன்  வேடம் உரித்தவன் பிறர் வேடங்களுள் ஊடுருவுகிறான் ;

இங்கு "நான் " என்பது எல்லோரையும் குறிக்கும் ;

" நீங்கள்" என்பது சுற்றியுள்ள காரியவாதிகளை,

ஏமாற்றுப் பேர்வழிகளைக்  குறிக்கும் .

உலக நடப்புகளை எண்ணி ...

பதவி ,புகழ் மொய்த்த காலத்தில் 

சாக்கடை ஈக்களாய் தன்னை மொய்த்த சூழல் --

அவை அற்று அல்லது இற்ற நிலையில் எப்படி ஒதுக்கித் தள்ளப் போகிறது 

என்பதை அனுபவ வாயிலாக அனுதினமும் அறிந்த உள்ளம் ,தன்னைத்

தனிப்படுத்தி ,தனக்கு வெளியே நின்று

தன்னைப் பார்ப்பதும்   ,காரியவாதிகளைப் பார்ப்பதும் தவறல்லவே !

இது உள்ளத்தின் பிதற்றல்கள்தானே --

எனவே இவற்றிற்கு --

பூத்திடும் பிதற்றல்கள்    

நான்  சிரிக்கிறேன் --

எரிவாயு அடுப்புபோல் ..

மௌனமாய்...அழகாய் ...நீலமாய்

உதடுகளில் புஷ்பிக்கிறேன் --

ஒன்றும் அறியாத சிரிப்பல்ல இது --

ஏமாந்ததோ ..ஏமாற்றுவதோ ஆன

சிரிப்பல்ல இது --

உஷ்ணமாய்  விஷயம் அறிந்த

விழ நெளிவான சிரிப்புதான் --

வாழ்வின் நடப்புகளை

வேகவைத்துக் கொண்டிருக்கும் சிரிப்பு !

&&

நீங்கள் மிகையாகப் பாராட்டிப்  பொங்கி

முகப் பாண்டங்களில் வழிகிறீர்கள் --

மௌனமாய் என்னைக் காத்துக் கொள்கிறேன் --

உங்களை இறங்கிவிடக்

குரல் கொடுக்கிறேன் -

நீங்களே என்னில் வீழ்ந்து

கருகித் தீய்ந்துவிடலாகாது  அல்லவா !

அல்லது ...நானே  உங்கள் சுடு வெள்ளத்தில்

அணைந்துவிடலாகாது  அல்லவா ?

&&

உங்கள் பொங்குதலின்  உந்துதலின்...

காரிய வாதங்களின்  கொக்கரிப்புகளை

ஒன்றும் நான் அறியாதவன் அல்லவே !

நீங்களும் ஏமாறவில்லை -

நானும்  ஏமாறுவது இல்லை  !

இரண்டுமே இருவருக்குமே 

நன்றாகத் தெரியுமே !

என்ன சுகம் இந்த ஒருவரை ஒருவர் 

ஏமாற்றுவதாய்ப்  பாசாங்கு பாவனைகளில் !

கை கொடுத்துக் கொண்டே 

கத்தி செருகுவதாய் ...

சிரிக்கும் பற்களிடைப்  பசி வேகம் தெரிவதாய் .!    nnnnnn

&&

என் முன்  நின்று என் இருக்கைகளுக்கு

வான விற்கள் ஆவதை விட்டு விட்டு --

நான் வீசும் நாணய விளிம்புகளில் 

தடுமாறி ஆடுவதை ஒழித்துவிட்டு --

விழிகளில் வியாபாரங்களை  வரையாமல் 

என்று என்னுள் வாழும் அந்த மனிதனை மட்டும் 

பார்க்கப் போகிறீர்கள் ?

என்று அவனோடு கைகோர்த்து வரப் போகிறீர்கள் ?

அந்த மனிதனை எங்கோ தொலைத்துவிட்டு 

அவன் பூத நிழலோடு கைகுலுக்க 

ஏன் இப்படிப்  போட்டியிடுகிறீர்கள்  ?
         
------சந்திர கலாதர்
           [ 04.12.1991 ] 



No comments:

Post a Comment