அந்தக் காலத்தில் எல்லாம் ......!
டிவி யில் தம்பட்டம் அடித்துக்கொள்ளும் ஒரு நிறுவனத்தின் தயாரிப்பான 'பால் பாய்ன்ட்' பேனா ரீபில்கள் நான்கை ,ஏமாறக்கூடாது போலிகளால் என்ற தற்காப்பு உணர்வுடன் ,நம்பகமான கடையில் சென்று வாங்கினேன் .
நான்கையும் உறை கிழித்து எழுதத் தொடங்கியவுடன் அபாரமாய் எழுதத் துவங்கின
ஒரு நாளுக்குப்பின் எங்கோ சுநாதம்போல் அவற்றிற்கு மெல்லமெல்லத் துக்கம் தொண்டையைக் கவ்வ, சிறிது சிறிதாய் அவற்றின் உதடுகளில் இருந்து வார்த்தைகள் வறண்டு போயின .ஒவ்வொரு ரீபில்லும் ரூ2/50.
ஆத்திரம் உச்சமானது .
சரிதான்..அவைதான் போகட்டும்.--
இந்தச் சிறுவர்கள் தொல்லை தாங்காமல் ஒரு உறை சாதா ரீபில்ல்கள் [ அதாவது பத்து ]வாங்கி வந்தேன் ..அதுவும் உள்ளதில் சிறந்த நிறுவனமாகத் தேர்ந்து .!
இவை காசு குறைவானாலும் ,பட்டை தீட்டினாலும் கொடுத்த காசுக்கு ஏழைத் தொழிலாளிபோல் சிறப்பாக உழைக்குமே என்று எண்ணி அந்த வர்க்கத்தின் மீது அன்பு கொண்டு அவற்றை வேலைக்குச் சேர்த்தேன் !
ஒரு துண்டுக் காகிதத்தில் ' பொன்னேர் ' பிடித்து நல்ல நேரம் பார்த்து ஒரு ' மாதிரி 'க்காக உழுததில் அல்லது ' வெள்ளோட்டம் ' விட்டதில் நெஞ்செல்லாம் ' பச்சைப் பசேல் ' நம்பிக்கை நாற்றுகள் !
கொஞ்ச நேரத்திலேயே எல்லா வடிவப் பேனாக்கள் உள்ளும் அவற்றை மிக்க அன்புடன் நடவு நட்டேன் !
ஒரு நாளைக்கு எல்லாமே ' சூப்பர் ஸ்டாராய் ' எழுத்துக் கோலங்களைச் சிதறித் தள்ளின.
நெஞ்சே ' பளீர் பளீர் !'
இனிமே அந்த வெள்ளைச் சட்டைக்காரன் வேண்டவே வேண்டாம் என இடமுடிவு [spot decision ] எடுத்தேன்
மறுநாள் என் பசங்களிடமிருந்தெல்லாம் ஈனமாய்க் குற்றப் பத்திரிகைகள்.
" அப்பா ! எதுவுமே சரியா எழுதலைப்பா !"
"எங்கயாவது கீழ போட்டுத் தொலைச்சிருப்பீங்க ...உங்களுக்கெல்லாம் பென்சில்தான் லாயக்கு மடப் பசங்களா ! " என்று பூமாரி பொழிந்த என் பேனாவைச் சோதிக்கிறேன் ....அதே [ தோ ] கதிதான் !
ஆத்திரம் எல்லை மீறியது .
என்ன பயன் ?
ஆனால் என் மீது எனக்கோர் நம்பிக்கை ..
எந்த அழும் குழந்தையையும் தட்டிக்கட்டி சமாதானம் பண்ணிச் சிரிக்க வைத்து விடுவேன் ; குறைந்தது அந்த வீறலை விசும்பல் அளவுக்கு இறக்கி விடுவேன் ..' உம ' மூஞ்சிக் குழந்தையை, அதன் சந்தேகத்தை மெல்லத் திருடி ஒரு வார்த்தையையாவது வாங்கி விடுவேன் ; குழந்தைகள்தானே மிகக் கஷ்டமான கருவிகள் ..அவற்றையே எண்ணெய் போட்டு இயக்கிவிடக்கூடிய அபாரத் திறமை படிந்ததால் , என் நெஞ்சு இம்மாதிரி நேரங்களில் திக்குகளின் எல்லைவரை பெருமிதத்தால் விரியும் !
யாரும் பாராட்டாவிட்டால் நானே நெஞ்சை முதுகாக்கித் தட்டிக் கொள்கிறேனே !
குழந்தையை விடவா இச்சின்ன ரீபில்கள் மோசம் ?
இவற்றின் அடத்தைக் கடைந்துவிட மாட்டேனா ?
எனக்குள் சிறு எக்காளம் ! பப்..பப்..பப்..பம்.பம் !
சுற்றும் முற்றும் ஒரு வீரப் பார்வையால் ஒரு மெழுகு மெழுகுகிறேன் !
ரீபில்களை உருவிக் கொஞ்சுகிறேன் உள்ளங்கைகளிடை.!
'விறு விறு ' என்று ' அந்தக் காலத்தில் ' தயிர் கடைவார்களே ' அதுபோல் உள்ளங்கைகளிடை வைத்துச் சூடு பறக்கத் தேய்த்து உருட்டுகிறேன்.
இளகியிருக்குமா என் ஆசைக் கொஞ்சல்களில் ?
எழுதிப் பார்க்கிறேன்.
இரு வகையும் ' பேப்பே ! '
அடுத்து வேகமாய் விரல்களே உதிர்ந்து போகுமாறு உதறுகிறேன் .
டமாரக் குச்சிகள்போல்மேஜை விளிம்பில் அடித்துப் பார்க்கிறேன் .
கழுத்து புடைக்கும் வரை வாயில் வைத்து நாயனமாய் ஊதிப் பார்க்கிறேன் .
' அபஸ்வரம்' கூடவரவில்லை !
என்ன செய்வது ?
சின்னதாய் ஒரு அறுவை சிகிச்சை ..?
சின்னதாயா ?
அதன் தலையையே உருவி ,உள்ளே ஒரு சிறு கம்பிஇழையை விட்டு சீர்கெட்ட மூளையைக் குடைந்து வெளியேற்றி ,மறுபடி உள்நுழைத்து பின் பக்கமாய் ஊதி ...ம்ம்...ஹூம் !
என் கன்னங்களுக்குத்தான் இப்போது சிகிச்சை செய்ய வேண்டுமோ ?
வலியால் சிவந்து போச்சே !
ஒ...நானும் சிவப்பாக இப்படி ஒரு வழி இருக்கோ !
அடுத்து என்ன செய்வது ?
வெளிநாடுகளிலும் செய்யாத மருத்துவம் செய்து முதல் இந்தியனாய் ..சேச்சே ..என்ன புத்தி ?..உலகில் முதல் முதலாய் அதைச் செய்தவனாய்ப் புகழ் பெற ஆசை கொள்கிறேன் --
என் உடம்பா என்ன?என் பிள்ளைகள் உடம்பா அவை ?
சோதனைதானே !
விறுவிறுவென பழைய டப்பாக்களைத் தேடி ,பழைய , முன்பு நன்றாக எழுதிக் காலாவதியான, அந்த நிறுவனப் படைப்பான, 'அந்தக் கால ' ரீபில்களைத் தேடிப் பிடிக்கிறேன் .
இப்போது நான் செய்யத் துணிந்தது ' தலை மாற்றம் ' [head transplantation ]
இதயம்,கிட்னி மாற்றம் எல்லாம் அருதப் பழசாச்சே !
ஒவ்வொரு ரீபில்லுக்கும் சரியாக 'மாட்ச்' ஆகிற தலைமாற்ற சிகிச்சை நடைபெறுகிறது .
தலைமாற்ற்ம் கச்சிதம் !
சிறிது துணை சிகிச்சைகளுக்குப்பின் உயிரோட்டம் உள்ளதா என்று சோதிக்கிறேன் -
உண்டு ! வெற்றி !
எப்படி ?
உயிர் ஓட்டம் உண்டு !
ஆம்,..உயிர் ஓடி.. ..யே போய்விட்டது !
பழையபடி பழைய தலை மாற்றம் --
போன உயிரை எப்படியாவது..?..விடுவதா ?
எங்கே என் பெருமைகள் ? கர்வங்கள்?
கடைசியாக ஒரு முயற்சி -
இதமான வெந்நீரில் ஒரு அன்பான 'குளியல்' கொடுக்கிறேன் .
பின் விரல் பொசுக்கும் வெந்நீரில் துடிதுடிக்கும் ' அழுத்தத்தால் '-உயிரில்லாமல் துடித்து வளைந்தது ..
கதறலில்லாமல் இளகல்..
'மை ' இல்லை ..
இப்போது இளகியது 'மைப்பாண்டம்'
அதாவது அந்த ' பிளாஸ்டிக்குழல்'
ஆமாம்.. இந்தச் சிறந்த கம்பெனிகள் மைப்பசை செலுத்துவதற்குப் பதில் பென்சில் ஆணியைச் செருகி விட்டார்களோ .....
மறதியாய்..மறக்கா மல் !
நேரம் பார்க்கிறேன் -
அறுபது நிமிடங்கள் செத்துக் காலடியில் !
அத்துடன் பதினான்கு ரீபில்களின் சடலங்கள் சித்ரவதைக்குள்ளாகி --
என் பசங்கள் சிரிப்பதற்குத் தயாராய் வாயைப் பொட்டலம் கட்டிக் கொண்டு ,எனக்குப் பயந்து நிற்கிறார்கள் !
" பரவாயில்லை ..சிரிங்கடா .சிரிங்க ! நான் என்ன செய்வது ? அப்படித் தயாரிக்கிறான்கள் ! இவங்க மேல 'கேஸ் ' போடப் போறேன் ..இப்பவும்தான் செய்யறானுங்களே ..பா...விங்க ! ' அந்தக் காலத்தில' 'ஸ்பெஷல் ' ரீபில் எப்படி எழுதும் தெரியுமா / " --அப்படீன்னு முடிக்கிறதுக்குள்ளே...
எட்டு வயசுச் சின்னப் பையன் சூரியதீப் சூரிய வெளிச்சம் போல ஒரு கேள்வி ரேகையை இறக்கினான் பாருங்க கள்ளமில்லா இயற்கையா ..!
" அப்பா! அப்பா ! ' அந்தக் காலம் ..அந்தக் காலம் ' ன்னு எப்பப் பாத்தாலும் சொல்லிண்டே இருக்கீங்களே அந்த ' அந்தக் காலம் ' எப்பப்பா முடிஞ்சி போச்சு ?"
இதுக்கு என்ன பதில் சொல்றது ?
நானும் ஒரு ' reynolds ' ரீபில்லாக் கீழே விழுந்துட்டேன் !
---சந்திர கலாதர்
[19. .11 . 1991 ]