பார்வைத் தடையிலா
எல்லையற்ற வான் விரிவு வேண்டும் .
வானின் ஜீவநதிகளாய் மேகங்கள்.
கொழுத்த மேகங்கள் கருத்த பார்வையுடன்
கனத்த பாதங்களில் அசைந்து வருகின்றன .
மேகங்களில் எத்தனை வகையுண்டோ அனைத்தும்
ஆங்காங்கே தீவுத் திடல்களாய் --
மகர ரேகைப் பயணம் மேற்கொண்டுள்ள சூ ரியன்
தென்மேற்கே தொடுவானில் செம்பந் தாய் --
தரையிலேயே இறங்குவதுபோல் ,
ஓர் கால்பந்தை உதைக்கும் உணர்வு நம்மில் மேலிட -
அட்டகாசமான ' செம்மாத்திரை ' விழுங்கலாய்
அந்தியின் தொண்டை அழகான வண்ணத்தில் !
மனம் என்னவெல்லாம் உருவகிக்கிறதோ அப் படியே
மேகங்கள் விண்ணக முகங்களாய் ஆனந்த நிறங் களில் !
அனுபவியுங்கள் இந்தச் ' சிலுசிலு ' காற்றின் ஓட்டத்தை !
துணிகளின் தொங்கு நடனத்தை --
உடுத்திய உடைகளின் உடுக்கு அடிப்புகளை --
கன்னத்தில் மோதும் காற்றின் வலிவை ,
அதன் தெளிவை , குளிர்வை ,விளையாட்டை --
கண்களை மூடி , காற்றை மெல்ல ஆழ உறிஞ்சி ,
இதயத்துள் பரப்பி ,நிரவி சுகத்தில் மிதவுங்கள் --
முந்தையப் புகைவண்டியின் நெடுந்தொடர்க் கரும்புகைபோல்
சிறு முடிச்சாய் எழுந்து விரிந்து வான் எல்லைகள் தொடும்
மேக வசீகரங்கள் -
தினமும் பார்த்தாலும் திகட்டாத என் வானமே !
பொய்க்காத என் மாலையே !
---சந்திர கலாதர்
06.12.2012 / வியாழன் /கார்த்திகை 21
அந்தி வேளை
